Latest topics
» I'm rudradevaby Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm
» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm
» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm
» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm
» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm
» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm
» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm
» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm
» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm
» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm
» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm
» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm
» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm
» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm
» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 16 on Mon Jun 08, 2020 3:53 pm
popup
எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
ராம ராஜ்யம் :: படைப்புகள் :: கதை
Page 1 of 1
எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்

குடும்பக்
கட்டுப்பாடு செய்து கொண்டால் சாமி குத்தமாகிவிடும் என்பதை நிஜமாகவோ அல்லது
வசதிக்காகவோ நம்பி நான்கு பெண் குழந்தைகளையும், ஒரு ஆண்குழந்தையையும் என
மொத்தமாக 7 குழந்தைகளை (2 பிறந்து இறந்து விட்டது) பெற்றெடுத்தவர்தான்
கிரேட் ராமசாமி. தொழில் விவசாயம். ஆடு, மாடு, கோழி, பூனை, நாய் என ஒரு
குட்டி விலங்குகள் சரணாலயமே வைத்து பராமரித்து வருகிறார். இந்தியாவில்
மகாத்மா காந்திக்கு போட்டியாக சட்டை போடாத இன்னொரு மனிதர். சூரிய உதயத்தை
ஒரு நாள் கூட பார்க்கத் தவறியதில்லை. கடின உழைப்பாளி.
அந்தக்
கிராமத்தை பற்றி சொல்ல வேண்டும். முதல் முறையாக ஹெலிகாப்டர் அந்த கிராமத்து
வழியாக பறந்து சென்ற போது ஏதோ குண்டு போட வந்து விட்டார்கள் என்று
நினைத்துக் கொண்டு சுரைக்கொடிக்குள் ஓடிச் சென்று ஒளிந்து கொண்ட மக்களைக்
கொண்டது அந்த கிராமம். அவர்கள் ஊரில் உள்ள ஒரே ரேடியோவில் போர்ச்
செய்திகளைக் கேட்டு கேட்டு ஏற்பட்ட பதற்றத்தில் இது போன்ற செயல்கள் எல்லாம்
அவ்வப்பொழுது நடைபெறும். அந்த ஊரிலேயே முதல் முறையாக பேருந்தை பார்த்தவர்
ராமசாமிதான். அவர்தான் அடிக்கடி தான் வளர்க்கும் ஆடுகளை மொத்தமாக ஓட்டிச்
சென்று பக்கத்து டவுனில் நடைபெறும் பிரமாண்ட சந்தையில் விற்று வருவார்.
அந்தக் கிராமத்துக்கு அவர்தான் உலகம் சுற்றும் வாலிபன்.
அன்று ஒரு
நாள், அவர் ஆடுகளை விற்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அரசாங்கம் முதன் முறையாக அந்தக் கிராமத்தில் பேருந்தை வெள்ளோட்டம்
விட்டிருந்தது. தூரமாக ஏதோ புழுதியைக் கிளப்பிக் கொண்டு வருவதை பார்த்த
ராமசாமிக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. ஓடிச் சென்று அருகிலிருந்த புளிய
மரத்தில் ஏறிக் கொண்டார். அது அருகில் வரவர அவரால் பிரமிப்பை அடக்க
முடியவில்லை. இவ்வளவு பிரமாணடமாக ஒரு இயந்திரம் ஊர்ந்து வருவதைப்
பார்க்கும் பொழுது அவருக்கு தலையை சுற்றிக் கொண்டு வந்தது. இறுக்கமாக
கிளையை பற்றிக் கொணடார். கண்களை கசக்கிக் கொண்டார். தைரியமாக இறங்கி ஓடிச்
சென்று ஒரு கல்லை எடுத்து எறிந்து விடலாமா? என்று கூட நினைத்தார்.
அதற்கடுத்த
ஒரு வாரத்தில் அவர் அளந்து விட்ட கதைகள் ஹிந்து நாளிதழ் அலுவலகம் வரை
சென்று விட்டது. ஹிந்து பேப்பரில் இப்படியொரு செய்தி வெளியானது.
இந்தியாவின் வளர்ச்சியடையாத கிராமம் ஒன்றில். வெளிகிரகத்தைச் சேர்ந்த
பறக்கும் தட்டு ஒன்று இறங்கியிருக்கிறது. அவர்கள் செல்லும் பொழுது மேய்ந்து
கொண்டிருந்த 2 மாடுகளையும், ஒரு கோழி மற்றும் நாய் ஒன்றையும் எடுத்துச்
சென்று விட்டார்கள். மேலும் அதை ஓட்டி வந்தவர்கள் பார்க்கவே கொடூரமாக
இருந்தார்கள்.
ஆங்கில எழுத்துக்களுக்கு நடுவே கருப்பு வெள்ளை
புகைப்படத்தில், கறைபற்கள் தெரிய சிரித்தபடி ராமசாமி போஸ் கொடுத்துக்
கொண்டிருந்தார். இந்த கிராமத்தில் உள்ள மிகச் சிறந்த கதை சொல்லிகளில்
ராசாமியும் ஒருவர். விட்டால் ஹாலிவுட் படங்களுக்கே அறிவியல் புனைக் கதைகளை
எல்லாம் கூறுவார். ஆனால் அதை புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு
அமெரிக்கர்களுக்கு அறிவு பத்தாது என்பது தான் நடைமுறை உண்மை.
வெளிக்கிரகத்து
மனிதர்களைப் பார்த்த தீட்டிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள ஐந்தாறுமுறை
தனக்குத்தானே மந்திரித்துக் கொண்டார். ஏற்கனவே தொங்க விடப்பட்டிருந்த
பல்வேறு தாயத்துக்களுக்கு நடுவே மேலும் சில தாயத்துக்களின் எண்ணிக்கையைக்
கூட்டிக் கொண்டார். ஊரில் நடைபெற்ற திருவிழாவின் போது அவருக்கு சிறப்பு
படையல் படைக்கப்பட்டது. அப்பொழுது அவருக்கு சாமி வந்து ஆடியதில் இரண்டு
ஆடுகளை கழுத்தை கடித்து ரத்தம் குடித்து விட்டார். அதன் பின் அவர் ஊர்க்
கோவிலின் சிறப்புப் பூசாரியாகிவிட்டார்.
அமெரிக்காவின் நாசா
விஞ்ஞானிகளுக்கு மத்தியில் கூட அவர் பெயர் அடிபட்டது. ஆனால் ராமசாமி ஊரில்
என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா? அரசாங்கம் விவசாயிகள் மேல் அக்கறை
கொண்டு அந்த கிராமத்தில் முதல் முறையாக டிராக்டரை அறிமுகப்படுத்தியது.
அப்பொழுது கூட அவர் உண்மையை சொல்லவில்லை. தான் பார்த்தது இது போன்றதொரு
இயந்திரம் தான் என்று. அந்த டிராக்டர் அவ்வளவு எளிதாக நிலத்தை உழுத அழகு
அவருக்கு ஏன் பிடிக்கவில்லை எனத் தெரியவில்லை. திடீரென அவர் மேல் ஆத்தா
இறங்கிவிட்டாள். நல்ல வேளை அந்த அரசாங்க ஊழியருக்கும் டிராக்டருக்கும்
பெரிதாக சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஊரிலிருந்து 15 கிலோமீட்டர் தள்ளிச்
சென்று விடப்பட்டார்கள்.
இவ்வளவையும் தெரிந்து கொண்ட பின்னரும், ஒரு
தற்கொலைப்படை ஊருக்குள் வந்தது. நமது ஊர் குடும்பக் கட்டுப்பாடு
அதிகாரிகளுக்கு மிகச்சிறந்த தைரியசாலிகளுக்கான விருதுகளை கொடுத்து
கவுரவிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. உண்மையில் அவர்களின்
அசாதாரணமான பணியின் காரணமாகத்தான் இந்தியா இந்த அளவிற்காவது
பிழைத்திருக்கிறது. ராமசாமி போன்ற மனிதர்களுக்கு சாராயத்தை ஊற்றிக்
கொடுத்து ஏமாற்றி குடும்பக் கட்டுப்பாடு செய்யவில்லை என்றால் என்னாவது
இந்தியா. ராமசாமி தனக்கு நடத்தப்பட்ட கு.க. வை உணர்ந்து தெளிந்த போது, அந்த
அதிகாரிகள் ஊரை காலி செய்து 2 நாட்கள் ஆகியிருந்தது. வருந்திதான் என்ன
பிரயோஜனம். இல்லை ஆத்தாவுக்கு கோபம் வந்துதான் என்ன நடக்கப்போகிறது.
முடிந்தது முடிந்ததுதான்.
ஆனால் ராமசாமி தன் கிராமத்தையும், கிராம
மக்களையும் உயிரினும் மேலாக நேசித்தார். ஆண்டவன் புண்ணியத்தில் அந்த
கிராமம் அதுவரை பஞ்சத்தில் மாட்டிக் கொண்டது கிடையாது. ஆனால் அந்த வருடம்
அதாவது கு.க அதிகாரிகள் வந்து சென்றபின், கடுமையான வறட்சிக்குட்பட்டது அந்த
கிராமம். ஆத்தா வந்திறங்குவதற்கு சரியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்
கொடுத்துவிட்டது அந்த வறட்சி, ஆனால் ஒவ்வொரு முறை ஆத்தா இறங்கும் பொழுதும்
வெளியிலிருந்து ஊருக்குள் வரும் ஆசாமிகளுக்குத்தான் கட்டுப்பாடுகளை
விதித்தாளே ஒழிய உள்ளூர் கிராமவாசிகளை நன்றாகப் பார்த்துக் கொண்டாள்.
சென்ற
முறை ஆத்தா இவ்வாறு தீர்ப்பளித்திருந்தாள். ஊர் கண்மாயை நம்பியிருந்த
விவசாய நிலங்களுக்கு எல்லாம் கிணறு வைத்திருப்பவர்கள் நீர்பாசன உதவி
அளித்திட வேண்டும் என்று. ராமசாமியிடம் இரண்டு கிணறு இருந்தது. அவர்
ஆத்தாவின் ஜட்ஜ்மெண்டை மீறாமல் தனது கிணறுகளிலிருந்து ஏழை விவசாயிகளின்
நிலங்களுக்கு நீர்பாசன வசதி செய்து கொடுத்தார். அதன் பிறகு கிராமம்
முழுவதும் அதுபோல செயல்பட்டது. ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த ராமசாமியின்
மகன் முத்துக் குமார், இந்த வருடம் மேல் வகுப்பு செல்ல இருக்கிறான்.
அருகில் இருக்கும் டவுனுக்குத்தான் செல்ல வேண்டும். சைக்கிள் வாங்கித்
தந்தால்தான் பள்ளிக்கூடம் போவேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டான்.
அடுத்த
முறை ஆத்தா இறங்கிய பொழுது 5ம் வகுப்பு வரை உள்ள ஊர்ப்
பொதுப்பள்ளிக்கூடம், மேல்நிலைப் பள்ளியாக மாற ஆவன செய்தாள். அதனால் ஊர்க்
குழந்தைகள் அனைவரும் 15 கிலோமீட்டர் டவுனுக்கு செல்ல வேண்டிய அவசியம்
ஏற்படவில்லை. ஆத்தா (ராமசாமி) ரசாயன உரங்களை ஊருக்குள் அனுமதிக்காத
காரணத்தால் இன்றும் அந்த கிராமம் நல்ல விளைச்சலைக் கொடுத்துக்
கொண்டிருந்தது. இயற்கை வளத்தோடு அழகாகத் தெரிந்த அந்த கிராமம் இன்றும்
அறிவியல் உலகத்தால் அவ்வளவாக கெட்டுப் போகாமல் பொலிவுடன் திகழ்ந்து
கொணடிருந்தது.
நேரம் பார்ப்பதற்கு சூரியனை மட்டுமே பயன்படுத்தி வந்த
ராமசாமி வீட்டில் வைக்க அழகாக இருக்குமே என நினைத்து சென்ற முறை
டவுனுக்குச் சென்றிருந்த போது ஒரு கடிகாரத்தை வாங்கி வந்திருந்தார். அந்த
கடிகாரத்தை பாத்திரம் கழுவும் பொழுது பாத்திரத்தோடு பாத்திரமாக நீருக்குள்
ஊற வைத்து கழுவிய பார்வதி (ராமசாமியின் தர்மபத்தினி) அம்மாளுக்கு, அந்த
கடிகாரம் நின்று போனது ஒன்றுமே தெரியவில்லை. அதை அழகாக துடைத்து
சாமியறையில் பிள்ளையார் படத்துக்கு அருகில் வைத்து விட்டார். அதன் தலையில்
ஒரு குங்குமப் பொட்டு வேறு. தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சிறு விஷயம் அந்த
வீட்டில் யாருக்கும் மணி பார்க்கத் தெரியாது என்பது. கடிகாரத்தின் உபயோகம்
பற்றியும் எதுவும் தெரியாது. அதை ஏதோ அழகுப் பொருள் என்று நினைத்து
விட்டார்கள்.
7ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த முத்துக்குமாருக்கு
அவனுடைய ஆசிரியர் மட்டும் 10 நாட்களாக சிரமப்பட்டு, வேதனைப்பட்டு
மணிபார்க்க சொல்லிக் கொடுக்காமல் விட்டிருந்தால், கடிகாரத்தைப் பற்றி
அறிந்து கொள்ளாமலே போயிருக்கும் அந்த குடும்பம். ஒரு வேகத்தில் அந்த
கடிகாரத்தைப் பிரித்து வேலை பார்க்க ஆரம்பித்தான் முத்து. கடின
முயற்சிக்குப் பின் அந்த கடிகாரம் யார் முயற்சி செய்தாலும் இனி சரி செய்ய
முடியாது என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டது. பின் மீண்டும் அழகுப் பொருளாக
மாறிப் போனது அது. என்ன நடந்தது என வீட்டில் யாருக்குமே தெரியவில்லை. அது
நேற்றைப் போலவே இன்றும் ஒரு அழகுப் பொருளாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது
சாமியறையில்.
8 ம் வகுப்பு : ஊரிலிருந்த ஒரே ரேடியோ ரிப்பேராகிப்
போனது. முத்துவுக்கோ வெகுநாட்களாக ரேடியோவை பிரித்து பார்க்க வேண்டும்
என்கிற ஆசை, அந்த ரேடியோவில் செய்தி கேட்டபடி வரக்காப்பி குடித்தால்தான்
காலைக் கடன்களை சிரமமின்றி கழிக்க முடியும் அந்த ஊர் பெருசுகளுக்கு. என்ன
செய்வது. சில நிமிடங்களில் பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டார்கள். முத்து நேரம்
பார்த்து தன் கோரிக்கையை பஞ்சாயத்தாரிடம் முன் வைத்தான். நீண்ட
விவாதத்திற்கு பிறகு அவனது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்
கொள்ளப்பட்டது. அந்த ரேடியோவை பிரித்து வெகு நேரமாக பார்த்து
கொண்டிருந்தான் முத்து. ரேடியோவுக்குள் ஒவ்வொரு பாகங்களையும் ஆசையாகத்
தொட்டுப் பார்த்தான். நன்றாகத் தடவிக் கொடுத்தான். வெகு நாள் ஆசை அது. பின்
ஏதோதோ செய்துவிட்டு அதை பயைபடி ஒன்று சேர்த்து மாட்டினான். அனைவரும்
ஆவலோடு சுற்றி நின்று வேடிக்கை பார்க்க அந்த ரேடியோ ஆன் செய்யப்பட்டது.
ஆனால் அந்த ரேடியோவுக்குள் இருந்து ஏன் வெண்புகை வெளிவருகிறது என்றுதான்
யாருக்கும் புரியவில்லை. வெடி விபத்துக்கள் குறித்து சற்றும்
அனுபவமில்லாதவர்கள் மட்டுமே அந்த ரேடியோவை சுற்றி அமர்ந்திருந்தார்கள்.
ஆனால் முத்து எழுந்து நாலுகால் பாய்ச்சலில் ஓடிவிட்டான்.
9 ம்
வகுப்பு :ஏன் வெளிநாட்டில் மட்டும்தான் விஞ்ஞானிகள் தோன்ற வேண்டுமா?
இந்தியாவில் பிறப்பவர்களுக்கெல்லாம் 6 வது அறிவு இல்லையா என்ன? நானும்
எடிசனைப் போல ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும் என்கிற லட்சிய வெறியை மனதிற்குள்
ஆழமாக விதைத்து விட்டான் முத்து. அது வேர் விட்டு வளர்ந்து இன்று ஒரு மரமாக
காட்சியளித்தது. ஊர் பண்னையார் ஆள் வைத்து தேடிக் கொண்டிருந்தார்
முத்துவை. காரணம் அவரது தோட்டத்தின் கிணற்றடியில் இருந்த மோட்டாரில் நேற்று
நண்பகல் 12:25 அளவில் தீபாவளி பட்டாசு வெடித்தது போன்ற ஒரு வெடிவிபத்து
ஏற்பட்டதாம். அதை சரி செய்ய வேண்டுமாம். ஆடு தானாக வந்து தலையைக்
கொடுக்கும் போது விடுவானேன். ஆனால் ஒரு பின்குறிப்பை மட்டும் தெரிந்து
கொள்வது சிரமமில்லாமல் இருக்கும். இரண்டு நாட்களுக்குப் பின் எவ்வளவுதான்
பேரம் பசினாலும் 600 ரூபாய்க்கு மேல் தர முடியாது என்று கூறிவிட்டான் அந்த
பழைய இரும்புக் கடைக்காரன். அவன் கூறுகிறான். இந்த அடி குழாய்க்கெல்லாம்
600 ருபாய்க்கு மேல் கொடுக்க முடியாது என்று. அதை நீர் இறைக்கும் கம்ப்ரசர்
மோட்டார் என்று கூறினால் அவன் நம்பவா போகிறான்?. வெகு சிரமமான
அனுபவங்களுக்குப் பின் முத்துக் குமார் கற்றுக் கொண்ட மிக முக்கியமான
பாடம், ஒரு சரிசெய்யப்பட்ட பொருள் எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கலாம்,
மறந்து போய் கூட அருகில் நி;ன்றுவிடக்கூடாது என்பதுதான்.
10ம்
வகுப்பு: பண்ணையார் சமீபத்தில் வாங்கியிருந்த ராஜ்தூத் பைக் முத்துவின்
கண்களை உறுத்த ஆரம்பித்து விட்டது. அவன் வெகுநாட்களாக எதிர்பார்த்துக்
கொண்டிருந்தான். அந்த வண்டி ஏதாவது ஒரு இடத்தில் முட்டிக் கொண்டு நின்று
விடாதா என்று. அதற்காக அவன் வெகுநாட்கள் காத்திருக்க வேண்டிருந்தது.
அது.... அந்த நாளுக்கு காரணமானவள், ஊரில் தயிர் விற்பவள்தான். அவளை
பார்த்துக் கொண்டே வண்டியை கண்மாய்க்குள் விட்டுவிட்டார் பண்ணையார்.
இன்ஜினுக்குள் நீர் ஏறி வண்டி உருட்டிக் கொண்டு வரப்பட்டது முத்துவிடம்.
நம்பினார் கைவிடப்படுவதில்லை என்பது தான் எவ்வளவு உண்மையான வார்த்தை. அந்த
ஊரில் மெக்கானிக் என்ற சிறப்புப் பெயர் வேறு தானாகவே உண்டாகிவிட்டது
முத்துவுக்கு. எத்தனை தோல்விகள் வந்தால்தான் என்ன? ஈடுபாடுதான் முக்கியம்.
மேலும் ஆர்வத்தை அடக்க முடியாமல் கைகள் நடுங்கும் போழுது அந்த வேதனை
உரியவர்களுக்குத்தான் புரியும். எத்தனை நாட்கள் தவிக்க வைத்து விட்டது இந்த
பைக். இன்று ஒரு கை பார்த்து விடுவது என்று செயலில் இறங்கிவிட்டான்.
வண்டியை வெயிலில் நிற்க வைத்து வெகு நேரமாக வேலை பார்த்து கொண்டிருந்தான்.
ஊரே கூடிவிட்டது. பண்ணையாரோ டவுனுக்கு ஆள் அனுப்பி பழைய இரும்புக்
கடைக்காரனிடம் விலை விசாரித்து வரச் சொல்லிவிட்டார். வெயில் மங்கும்
நேரத்தில் அந்த விபத்து நேர்ந்தே விட்டது. அந்த வண்டி ஸ்டார்ட் ஆகிவிட்டது.
சுற்றி நின்றிருந்த ஊர் மக்கள் அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்தார்கள். அந்த
ஆர்ப்பரிப்பு எந்த அளவுக்கு இருந்தது என்றால் “நம்ம ஊர் எம்.எல்.ஏ முத்து
வாழ்க” என்று உணர்ச்சி வேகத்தில் ஒருவன் கூவும் அளவுக்கு. நம்ம ஊர்
மக்களிடம் தான் அரிசிச் சோறும், கட்சி ஓட்டும் ரத்தத்தில் ஊறிய விஷயம்
ஆயிற்றே.
பண்ணையார் பெருமை பொங்க பார்த்தார். தனது கழுத்திலிருந்த
சங்கிலியை (கல்யாணி கவரிங்) கழற்றி ஆனந்த கண்ணீர் பொங்க முத்துவின்
கழுத்தில் அணிவித்தார். ஊர் மக்கள் அனைவரும் வியந்து போனார்கள். அப்பொழுது
ஒரு குரல் “அடுத்த எம்.எல்.ஏ. பண்ணையார் வாழ்க” 5 வருடமானால் என்ன? இல்லை 5
நிமிடங்கள் என்றால் தான் என்ன? இங்கு எம்.எல்.ஏ. பிச்சை எளிதாக
கிடைத்துவிடும்.
மேற்படிப்பு:
ஊரில் நடைபெற்ற முக்கியமான
விஷயங்ளையெல்லாம் ஞாபகார்த்தமாக இருக்கட்டுமே என்று ஒரு கல்வெட்டு
செதுக்குவார்களேயானால், அதில், முத்து மேற்படிப்பு படிக்க (ஐ.டி.ஐ)
டவுனுக்கு சென்ற விஷயம் இடம்பெறும், பண்னையார் மகனைத்தவிர அந்த ஊரில்
யாரும் அதிகமாக படித்ததில்லை.அவர் சில வருடங்களுக்கு முன்னர்தான் 9ம்
வகுப்பை பாதியில் விட்டிருந்தார். பின் அரசியலில் ஈடுபட
ஆரம்பித்துவிட்டார். அந்த ஐ.டி.ஐ. படிப்பை 2 வருடங்களில் முடிப்பதற்குள்
தனது ஏழு அறிவையும் பயன்படுத்தி படாதபாடு படுத்திவிட்டான் முத்து.
என்னதான்
கிறுக்குத்தனமாக பல காரியங்களை செய்தாலும் அவன் நிறைய கற்றுக் கொண்டான்.
தான் கற்றுக் கொண்டதை நடைமுறைப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டினான். மனித
உழைப்போடு நவீன இயந்திரங்களையும் கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்
என்று விரும்பினான். ராமசாமியோ அடங்கிப் போனார். முன்னைப் போல் அவரால்
தீவிரமாக செயல்பட முடியவில்லை. ஊரில் போலியோ சொட்டுமருந்து கொடுக்காமல்
ஊனமாகிப் போன குழந்தைகளுக்கு மந்திரித்துவிட்டு தாயத்து கொடுத்துக்
கொண்டிருந்தார்.
ஊருக்குள் முதன் முறையாக ட்ராக்டரை கொண்டு வந்து உழ
ஆரம்பித்தவன் முத்துதான். அரசாங்கமும், பண்னையாரும் அவனுக்கு நிதி உதவி
செய்தார்கள். நீர் பாசனத்திலிருக்கும் பல்வேறு நவீன முறைகளையும்
கிராமத்துக்குள் கொண்டுவந்தான். அரசாங்கத்துக்கு எழுதிப் போட்டு ஊருக்குப்
பொதுத் தொலைக்காட்சி பெட்டியை வரவழைத்தான். ஊர் மக்கள் வயலும் வாழ்வும்
தவிர அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்தார்கள். முக்கியமாக ஒளியும் ஒலியும்,
சென்றமுறை இப்படித்தான் வெள்ளிக் கிழமை இரவு ஊருக்குள் தீ விபத்து
ஏற்பட்டுவிட்டது. ஒளியும் ஒலியும் பார்த்து முடித்துவிட்டுத்தான்
சென்றார்கள் மக்கள் தீயை அணைக்க.
ராமசாமி இதையெல்லாம் எப்படி
அனுமதித்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறதா? அவர் கடைசியாக சாமி வந்து ஆடிய
போது மயங்கி விழுந்துவிட்டார். மருத்துவரிடம் அழைத்து சென்றபின்தான்
தெரிந்தது. ரத்தக் கொதிப்பு கன்னாபின்னாவென உயர்ந்திருப்பது. இனிமேல்
சாமியாடினால் நேரா சாமிகிட்ட போயிட வேண்டியது தான் என மருத்துவர்
எச்சரித்தார். ராமசாமிக்கு என்ன உயிர் மேல் ஆசையில்லையா என்ன?
பல்வேறு
நவீன பட்டபடிப்புகளையெல்லாம் பயின்றுவிட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிடும்
இளைஞர்களுக்கு மத்தியில், சுமாரான படிப்பைதான் படித்திருந்தான் என்றாலும்,
முத்துவால் அந்த கிராமம் அடைந்திருக்கும் பலன் அதிகம். இவன் பத்தாம்
பசலித்தனமானவன், வெகுளியானவன், பொழைக்கத் தெரியாதவன், அறியாமை நிறைந்தவன்
என எப்படி அடைமொழி போட்டுக் கூறினாலும் அதற்குத் தகுதியானவன்தான். ஆனால்
இவனைப் போன்றவர்களுக்கும், இது போன்ற கிராமங்களும், இந்த நாடும்
கடமைப்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
கட்டாயத்தின்
பேரில் நாட்டுக்குச் சேவை என்பதோ, அல்லது கருத்துத் திணிப்பின் மூலமாகவோ?
ஒரு படித்த இளைஞனை தடுத்து நிறுத்திவிட முடியாது. வெகுளித்தனமான அன்போடு
கூடிய ஆர்வமான கல்வியால் மட்டுமே இளைஞர்களை இந்தியாவை நோக்கி திசை திருப்ப
முடியும். முத்துவின் மகிழ்ச்சியையும், அவனால் அந்த கிராமம் அடைந்த
வளர்ச்சியையும், அமெரி;க்காவின் ஒரு தொழில் நுட்ப வல்லுனராலும் அடைந்து விட
முடியாது.
ராமசாமியும், முத்துவும் முரண்பட்ட இருதுருவங்கள் தான்
இருப்பினும் அவர்கள் அடிமனதில் உள்ள நல்ல விஷயம் கிராமத்தின் நலன் மட்டுமே.
அவர்கள் எவ்வளவுதான் கிறுக்குத்தனங்கள் செய்தாலும் அவையெல்லாம்
கிராமத்திற்கு நன்மையைத்தான் வழங்கின. சுயநலமற்ற நல்ல மனம் என்ற ஒன்று
மட்டும் இருந்து விட்டால்போதும். நடப்பவையெல்லாம் நன்மையாகத்தான் முடியும்.



santhoshkumar- பதிவுகள் : 589
சேர்ந்தது : 02/12/2010
ராம ராஜ்யம் :: படைப்புகள் :: கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum